Sunday, June 5, 2016

தமிழ்ப் பொழில் (1933-1934) துணர்: 9 - மலர்: 6

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஒன்பதாம் ஆண்டு:   (1933-1934) துணர்: 9 - மலர்: 6
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

ஒன்பதாம் ஆண்டு:   (1933-1934)
துணர்: 9 - மலர்: 6
_________________________________________________________


1. உலகிற் சிறந்ததெது
இ. கோவிந்தசாமி பிள்ளை
[உலகம் என்ற சொல் பற்றி அது வடமொழியா அல்லது தமிழ் மொழியா என்ற ஆய்வு, உலகம் என்பது எதனைக்  குறிக்கிறது என்ற ஆய்வு ஆகியன இப்பகுதியில் இடம் பெறுகின்றன. இவற்றைத் தொடர்ந்து உலகில் சிறந்ததெது என்பது பற்றிய ஆய்வு அடுத்து தொடர்ந்து தொடரவிருக்கிறது]

2. முதுகண்ணும் தலைக்கோலும்  (தொடர்ச்சி...)
T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[அரங்கில் ஆடும் நாட்டியக் கலைஞர்களுக்கு அரசர் வழங்கும் விருது "தலைக்கோல்" என்பதாகும்.  விருது பெரும் நாட்டியமங்கை 'தலைக்கோலி' என்று அறியப்படுவார். விருது வழங்கும் அரசர்கள் தங்கள் பெயரையும் இணைத்து 'குலோத்துங்கச் சோழப் பல்லவராயன்' என்றோ 'விக்கிரமச் சோழப் பல்லவராயன்' என்று பட்டங்களை வழங்கும் வழக்கம் நடைமுறையில் இருந்துள்ளது. அவ்வழக்கத்தையொட்டி  பட்டம் அளிக்கும் அரசரின் பெயரும் முன்னொட்டாக இணைக்கப்பட்டு 'ஜயங்கொண்ட சோழத் தலைக்கோலி' எனவும் 'மதுராந்தகத் தலைக்கோலி' எனவும் விருதுகள்  வழங்கப் பட்டுள்ளன.  "தலைக்கோல்"  'தலைக்கோலி' என்ற சொற்கள்  குறித்த  கல்வெட்டுத்  தகவல்கள் இப்பகுதியில் தொடர்கிறது கொடுக்கப்பட்டுள்ளன]

3. அறுபத்து மூவர் காலம்   (தொடர்ச்சி...)
K. சோமசுந்தரம் பிள்ளை
[மூர்த்தி நாயனார், கண்ணப்பர், சாக்கிய நாயனார், காரைக்காலம்மையார் ஆகிய நால்வரும் 6 ஆம் நூற்றாண்டிற்கு முன் வாழ்ந்தோர் என்று கல்லாட ஆசிரியரின் பாடல்கள் அடிப்படையில் தெரிகிறது என்றும்;  மாணிக்க வாசகர் கல்லாடர் காலத்திற்கு முற்பட்டவர் என்பதும் கல்லாடர் பாடல் வழியே புலனாகிறது என்று கூறியதுடன்; கண்ணப்பர், சண்டேசுவரர், மாணிக்க வாசகர் ஆகியோர் 3 ஆம் நூற்றாண்டிற்கு முன்னிருந்தவர் என்று இக்கட்டுரை ஆசிரியர் கருதுகிறார். எனவே அப்பருக்கும் முன் வாழ்ந்தவர் மாணிக்கவாசகர் என்பது சோமசுந்தரம் பிள்ளை அவர்களின் கருத்து, அத்துடன் "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்" என்ற குறளையும் குறிப்பிட்டுக் கட்டுரையை முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது]

4. பருத்தி மகாநாடு
B. N. ராஜன்
[பண்டைய இலக்கியம் குறிக்கும் "ஆவியந்துகில்", டாக்கா "மஸ்லீன்" போன்ற ஆடைகளைத் தயாரித்து ஏற்றுமதி செய்த இந்திய நெசவுத் தொழில் 19 நூற்றாண்டின் முற்பகுதியில் அழிந்தது.  இந்தியாவில் கல்கத்தாவில் முதன்முதலில் 1818 இல் இயந்திர நெசவாலை நிறுவப்பட்டு, முப்பதாண்டுகளுக்குப் பின்னர் பம்பாயிலும் நிறுவப்பட்டது. நூல்களே நூற்கப்பட்டு உள்நாட்டுக் கைத்தறி தொழிலுக்கு ஆதாரமாக இருந்தது.  1860 இல் "உள்நாட்டுப் போரினால்" அமெரிக்கப் பருத்தி ஏற்றுமதி தடைப்பட்டதால், இங்கிலாந்தின் கவனம் இந்தியப் பருத்தியின் பக்கம் திரும்பியது. அதனால் இந்திய நெசவாலை வளர்ச்சியுற்றது. ஆனால், 1894 இல் விதிக்கப்பட்ட 'பருத்தி வரி', வணிகச் சந்தையில் ஜப்பானின் தலையீடு, சீனாவின் தன்னிறைவு முயற்சி ஆகிய காரணங்களால்  மீண்டும் நலிவுறத் துவங்கியது. எனினும், 1905 இல் வங்கத்தின் தேசிய இயக்கத்தால் நிலை மாறி, இந்திய நெசவு மான்செஸ்டரையும் பின்னுக்குத் தள்ளியது. அதன் பிறகு பருத்தி வரியும் நீக்கப்பட்டு, பல  அரசு ஆதரவுத் திட்டங்களால் நெசவுத் தொழில் மறுமலர்ச்சி கண்டது. ஆயினும், பிறகு போர்க்காலத்தில் நிலைமை மாறி ஜப்பான்  உலகச் சந்தையில் விரைவில் வளர்ந்தது. இதனைத்தொடர்ந்து இங்கிலாந்தும், இந்தியாவும், ஜப்பானும் கூட்டு முயற்சியாக  1933 இல் ஒரு ஒப்பந்த நடவடிக்கையில் ஈடுபடுவது பற்றிய (வரலாற்றுப்) பதிவு இது. ஒரு தொழிலை வளர்ப்பதிலும், நலிவடையச்செய்வதிலும்  அரசின் வரிவிதிப்பு முறைகளும், திட்டங்களும் ஆற்றும் பங்கினைப் பற்றியும்; உலக வணிகச் சந்தை ஒரு தொழில் மீது கொண்டுள்ள தாக்கம் பற்றியும்  இக்கட்டுரை வழி நன்கு அறியலாம்]

5. ஆழ்வார் பாரதமும் - சோழர்களும்
ம. வி. இராகவன்
[வில்லிபுத்தூரர் தமது பாரதப் பாடல்களில் தமிழக  மூவேந்தர்களையும் போற்றிப் புகழ்ந்துள்ளார்.  அம்மன்னர்களில் அவரால் பாராட்டப்பட்ட சோழமன்னர்கள் பற்றியத் தொகுப்பு இது.  தமிழிலக்கியங்களில் காணப்படும் காவிரியையும், மனுகுலத் தோன்றல்களாகிய சோழர்களைப் பற்றியக் குறிப்புகளை முன்னுரையாகக் கொடுத்த பின்னர், தமது பாரதத்தில் பாஞ்சாலியின்  சுயம்வர நிகழ்வில் பங்கு பெறச் சென்ற மூவேந்தர்களையும், அவர்களில் 'இரவிகுல வளவன்' என்று சோழனையும் வில்லிபுத்தூரர் குறிப்பதைக் காட்டுகிறார். இது ஒரு தொடர் கட்டுரை]

6. தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர்  தமிழ்ப் பொழில்
இதழாசிரியர்  த.வே. உமாமகேசுவரம் பிள்ளை அவர்களுக்கு  "செந்தமிழ்ப் புரவலர்" பட்டம் வழங்கப் பட்டதையொட்டி ஒரு வாழ்த்துப் பாடல்
அ. வரதநஞ்சைய பிள்ளை
[நேரிசை ஆசிரியப்பாவில் ஓர் வாழ்த்துப்பாடல்]

7. தமிழ்ச் செய்திகள்
இதழாசிரியர்
[1933 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சென்னையில் நடைபெறவிருந்த   'தமிழன்பர் மாநாடு' பற்றிய குறிப்பு.   மாநாட்டுக் கட்டுரைகளையும் நூல்களையும்  எளியத் தமிழில் எழுதுமாறும், பேச்சு வழக்கிலிருக்கும் கொச்சை மொழியில்  எழுதுவதைத் தவிர்க்குமாறும் வேண்டுகோள் வைக்கப்படுகிறது.
ஆங்கிலமொழிக் கலைநூல்களைத் தமிழில் எழுத விரும்புபவர் போதிய தமிழ்ப் பயிற்சியின்றி எழுதத் துணிந்துவிட்டு, இயலாது தடுமாறும் பொழுது தமிழின் வளத்தைக் குறை கூறவும் துணிவது பேதைமை என எழுத்தாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
பிற மொழிகளில் தங்களிடம் இல்லாத ஒலிக்குறிப்புகளுக்காக புதிய புதிய எழுத்துக்களைத் தங்கள் மொழியில் புகுத்தும் முறையோ, தேவையற்றவை என்று எழுத்துக்களை நீக்கும் முறையோ  இல்லை.  ஆனால், தமிழரிடம் அந்த மனப்பான்மை இல்லை. தமிழர் பிறமொழிக்குத் தரும் மதிப்பைத் தமிழுக்குத் தருவதில்லை.  கலைநூல்களை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்ப்பதாகக் கூறி வடமொழியைப் புகுத்தும் முறை உள்ளது.  தமிழ் மரபிற்கு ஒவ்வாத முறையில் தமிழைக் கையாள்வது தமிழ்க் கொலைக்கு ஒப்பாகும் எனவும்    ஆங்கிலக் கலைநூல்களைத் தமிழ் மார்பிற்கு ஏற்றவாறு தமிழ்மொழியில் எழுத அறிவுரை கூறப்பட்டுள்ளது.

கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரியின் ஆண்டுவிழா நிகழ்ச்சியின் நிகழ்வுகளின் தொகுப்பு.
தமிழ்ச் சங்கத்தின் 'திக்கற்ற மாணவர்' இல்லத்திற்கு நன்கொடையளித்த த. பொ. கை. அழகர்சாமி பிள்ளைக்குப் நன்றியும் பாராட்டும் கூறப்பட்டுள்ளது]

8. புத்தக மதிப்புரை
இதழாசிரியர்
[ "தனவணிகன்" என்ற இதழை வெளியிடும் பர்மாவின் நாட்டுக் கோட்டைச் செட்டியார்சங்கம்  வெளியிட்டுள்ள "தனவணிகன் சங்கமலர்" என்ற கட்டுரைத் திரட்டு  நூலுக்கு  மதிப்புரை வழங்கப் பட்டுள்ளது]

9. தமிழ்ப் புத்தகக் காட்சிச் சாலை
கே. வி. கிருஷ்ணஸ்வாமி ஐயர்
[1933 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடக்கவிருக்கும் தமிழன்பர் மாநாட்டையொட்டி சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  புத்தகக் கண்காட்சி பற்றிய விவரங்கள் கொண்ட அறிவிப்பும் அழைப்பும்]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment