Wednesday, June 8, 2016

தமிழ்ப் பொழில் (1933-1934) துணர்: 9 - மலர்: 9

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஒன்பதாம் ஆண்டு:   (1933-1934) துணர்: 9 - மலர்: 9
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

ஒன்பதாம் ஆண்டு:   (1933-1934)
துணர்: 9 - மலர்: 9

_________________________________________________________

1. சைவ சித்தாந்த மகாசமாச 28 - ஆம் ஆண்டு நிறைவு விழா - தலைமைப் பேருரை
ந. மு. வேங்கடசாமி நட்டார்
[சைவத்தின் தொன்மையையும்; சைவநூல்களான  பன்னிரு திருமுறைகள், பதினான்கு சித்தாந்தங்களுடன், சைவருக்கான நூலான திருக்குறள் ஆகியவற்றின் பெருமையையும்; சைவத்தின் கோட்பாடுகளையும்; அருவ, உருவ, அருவுருவத் திருவுருவான கடவுளையும் போற்றுகிறார் வேங்கடசாமி நட்டார்.
அத்துடன், சமய நெறியில் சாதி குலம் என்னும் எண்ணம் உதித்தலே குற்றம் என்பது சான்றோர் கருத்து என்பதியும் குறிப்பிட்டு அக்காலத்தில் கோவிலில் அனைவரையும் அனுமதிக்காத நிகழ்வைச் சுட்டிக்காட்டி சமயக் கொள்கைகளை ஆய்ந்தறிந்து ஒழுக வேண்டுகிறார்.  சைவரென்பவர் தனது சமய உண்மைகளை நன்கு அறிந்திருக்க வேண்டும் என்பதால், அதற்கான விழிப்புணர்வை சைவ சித்தாந்த மகாசமாசம் முன்னெடுக்கவும்  வேண்டுகோள் வைக்கிறார்]

2. உலகிற் சிறந்ததெது (தொடர்ச்சி...)
இ. கோவிந்தசாமி பிள்ளை
[உலகிற் சிறந்த சிவபரம்பொருளின் பொருளைத் தெளிவாக அறிதற்குரிய நூல்களை ஆராய்ந்து ஒழுகும் நெறியே  சைவசமயம் ஆகும். சமயம் என்பது ஓர் ஆன்மநிலை;  சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய சைவ சமயப்பரப்பு; பதி, பசு, பாசம் என்னும் சமயநெறியினை  உணர்த்தும் நிலை  என்று சைவ சமயப் பெருமைகளை உரைக்கும்  இக்கட்டுரை நிறைவுற்றது]

3. அளவை நூன் முன்னுரை - ஆராய்ச்சி நூல் கற்கும் முறை (தொடர்ச்சி...)
T. இராமநாத பிள்ளை
[அளவைநூல் சிந்தனையின் திறனாராயும் ஒரு நூல், சரியான சிந்தனை முறைகளுக்கும், பிழையான முறைகளுக்கும் உள்ள வேற்றுமையைக் காட்டி நிற்கும். இவை நாகரீகத்தை வளர்த்தற்கு இன்றியமையாதவை.  அளவை நூல்கள் தத்துவ நூலிற்கு அடிப்படை,  அளவை நூலின் கோட்பாடுகளே தத்துவ நூலின் அளவையும் ஆகும்.  அளவை நூலாரும் உளநூலார் போன்றே  சிந்தனையைப் பற்றி ஆராய்வர் என்று திறனாராயும் ஆராய்ச்சி நூலான அளவைநூல்களின் தேவையைப் பற்றி  விளக்கும் இக்கட்டுரை நிறைவுற்றது]

4. சாக்கைக் கூத்து (தொடர்ச்சி...)
T. M. இராமச்சந்திரன் செட்டியார்
[சாக்கைக் கூத்தைப் பற்றி சோழ மன்னன்  மற்றும் பாண்டியன் ஜடாவர்மன் வீரபாண்டியத் தேவன் (கிபி. 1258 ஆம் ஆண்டு)   ஆகியோரின் கல்வெட்டுக்கள் செய்திகள் தருகின்றன, ஆனால் இலக்கிய நூல்களில் சாக்கியக்கூத்து என்றால் என்ன என்ற விவரங்கள் காணப்படவில்லை. நிகண்டுகள் 'சாக்கியர்' என்பதற்கு அளிக்கும் விளக்கங்களில் இருந்து, சாக்கியக்கூத்தை நிகழ்த்தியவர் பல நூல்களையும் கற்றவராகவும்,  வருங்காலம் சொல்லும் நிமித்திகராகவும்,  கருமங்களைச் செய்விக்கும் புரோகிதராகவும் இருந்திருப்பார்கள் எனப் பொருள் கொள்ளலாம் என்கிறார் இராமச்சந்திரன் செட்டியார். மலையாள நாட்டில் இக்காலத்திலும் பழமையான கோயில்களில் "சாக்கியர் கூத்து" என்ற பெயரில் இவை நிகழ்த்தப்படுகின்றன. சாக்கியரில் ஒருவரும், நம்பியாரில் ஒருவரும், நங்கையாரில் ஒருவரும் என மூவர் இக்கூத்தை நடத்துவர்.  இவை பெரும்பாலும் இராமாயணம், பாரதம், பாகவதம் நிகழ்வுகளை நடத்திக் காட்டுவதாக அமைந்திருக்கும். அத்துடன் கூத்தின் வழி அதிகாரத்தில் உள்ளவரையும் கண்டிக்கும் வழக்கமும் இருக்கிறது என்பது இக்கட்டுரை தரும் தகவல், இது ஒரு தொடர் கட்டுரை]

5. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும் (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் யாவருடைய உரையிலும் குற்றங் குறைகள் கூறி இறுதியில் தொல்காப்பியத்தில் வடமொழி சிவஞான முனிவர் நூலின் தாக்கம் என்று தனது நூலில்  சொல்லிச் சென்றுள்ளார். அதற்கான  மறுப்பு 38 இன் தொடர்ச்சி ...கட்டுரையின் இப்பகுதியில் தொடர்கிறது ... ]


________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்



வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment