Sunday, July 3, 2016

தமிழ்ப் பொழில் (1935-1936) துணர்: 11 - மலர்: 10

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பதினோறாம் ஆண்டு:   (1935-1936) துணர்: 11 - மலர்: 10
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பதினோறாம் ஆண்டு:   (1935-1936)
துணர்: 11 - மலர்: 10

_________________________________________________________

1.  பரணர் என்னும் ஆராய்ச்சி நூல்
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
[முன்னர் தமிழ்ப் பொழிலில் பரணர் குறித்து ஆய்வுக் கட்டுரையை  எழுதியவர் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை. இக்கட்டுரையில், சென்னைப் பல்கலைக் கழக விரிவுரையாளரும், பன்மொழி அறிஞருமான வே. வேங்கடராஜுலு ரெட்டியார் எழுதிய 'பரணர் என்னும் ஆராய்ச்சி நூல்' மீது நூல் மதிப்புரை  எழுதியுள்ளார். 
'கலம் தொடா மகளிர்' குறித்த ஆய்வு செய்வோர், 'ஆகில்கலங்கழீ இயற்றும்' மற்றும்   'தொடுகலம்' குறித்து இக்கட்டுரை கூறும் கருத்துக்களில் ஆர்வம் கொண்டிருப்பர்.  இப்பகுதியில், பண்டைய நூல்களைப் பிழையின்றிப் பொருள் கொள்ள உதவிடும்  நோக்கில்,   பழைய நூல்களைப் பதிப்பிக்கும் செயல்பற்றி அறிய வேண்டிய செய்திகளைத்தருகிறார். இக்கட்டுரை ... தொடரும்]

2. வரருசி கதை (தொடர்ச்சி ...)
R. பொன்னுசாமி பிள்ளை
[வடமொழிப் புலவர் பாணினி முனிவர் எழுதிய 'அஷ்டாத்யாயீ' என்ற இலக்கண நூலுக்கு 'வார்த்திகம்' என்ற உரைநூலை எழுதியவர் வரருசி என்பவர். வரருசியாரின் வாழ்க்கை வரலாறு 'கதாசரித்சாகரம்' என்ற கதைநூலில் இடம்பெற்றுள்ளது. அக்கதையைத் தழுவி வரருசியாரின்  கதையை பொன்னுசாமி பிள்ளை எழுதியுள்ளார்.
இப்பகுதியில்; தன்னைக் கொல்ல விரும்பிய மன்னனிடம் இருந்து தப்பிக்க மறைந்து வாழ்ந்த வரருசியார் தக்கதருணத்தில் வெளிப்பட்டு, துன்பத்தில் இருந்த மன்னனுக்கு உதவி செய்து விடுதலை பெறுகிறார். தனது மனைவியுடன் துறவறம் மேற்கொண்டு கானகம் செல்கிறார்.  மன்னனும் அவனது மைந்தனும் இறந்த பிறகு அமைச்சர் சந்திரகுப்தனை அரசனாக்கி, சாணக்கியரைத் தனது அமைச்சர் பதவியில் இருத்திவிட்டு அவரும் துறவறம் மேற்கொள்கிறார்.  இக்கதை நிறைவுற்றது]

3. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும், அதன் மேல் செந்தமிழ் பத்திராதிபர் திரு. நாராயணையங்கார் எழுப்பிய தடையும், அதற்கு விடையும்   (தொடர்ச்சி ...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  அத்துடன், நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்களின்  தொல்காப்பிய உரையை ஆதரித்து   நாராயணையங்கார் கொடுத்த மறுமொழியையும் இதில் மறுக்கிறார்.  அதற்கான  மறுப்பின் தொடர்ச்சி ...]

4. கருதலளவைப் பகுதி (தொடர்ச்சி ...)
த. இராமநாத பிள்ளை
[4 ஆம்  அதிகாரம்:  கட்டுரையின் இப்பகுதி, பத்தளவை,   வழியளவை, மேனாட்டு அந்நுவயம், அந்நுவய விதிகள், ஐயமத்தி, ஈயாமத்தி  ஆகிய கருத்தாக்கங்களை விளக்குகிறது.  இது ஒரு தொடர் கட்டுரை]

5. வள்ளல்  ஆய் அண்டிரன் - ஒரு சிறு நாடகம்
சிவ. குப்புசாமிப் பிள்ளை
[தமிழ்ப்பொழிலில் தமிழகமன்னர்கள் பலரின் வாழ்க்கை வரலாறுகளை நாடக வடிவில் வழங்கிய சிவ. குப்புசாமிப் பிள்ளை அவர்களால், இம்முறை வள்ளல்  ஆய் அண்டிரன் வாழ்க்கை வரலாறு  நாடக வடிவில் வழங்கப்படுகிறது.
இப்பகுதியில், கொங்கு மன்னன் தனது நாட்டின் மீது போர் தொடுக்கும் திட்டத்தை  ஒற்றன் மூலம் அறிந்து அமைச்சருடனும் படைத் தலைவனுடனும் ஆய் அண்டிரன் திட்டம் வகுக்கும் காட்சியும், வேட்டைக்குச்  செல்லும் ஆய் அண்டிரன் பொதிகைவேளின் மகள் பொற்பூங்கோதையைச் சந்திக்கும் காட்சியும்  இடம் பெறுகிறது.  இந்நாடகத்தின் காட்சிகள் தொடரும்...]

6. தமிழ்ச்செய்தி
L. உலகநாத பிள்ளை
[சங்கத்தின் ஆண்டுவிழாவிற்குத் தலைமையேற்ற L. உலகநாத பிள்ளை  அவர்களின் தலைமையுரை. தமிழ் என்னும் சொல் திராவிடம் > திரமிளம் என்று திரிந்த சொல்லன்று.  தமிழ் மொழியை உருவாக்கியவர் அகத்தியரும் அல்லர். வேத காலம் என ஆய்வு நூல்கள் காட்டும் காலத்திற்கும் முற்பட்டது தமிழ், தமிழ்ச்சங்கங்களின் காலங்கள் என வரையறுக்கப்பட்ட காலங்கள், எழுத்து, சொல், பொருள் ஆகியவற்றிற்கு இலக்கணம் கண்ட தொல்காப்பியத்தின் சிறப்பு, அதிலும் அகம் புறம் என்று வகுத்த பொருளதிகாரத்தின் சிறப்பு, சங்க இலக்கியங்களின் சிறப்பு, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழின் சிறப்பு எனத் தமிழின் சிறப்புகளை மாணவர்களுக்கு உரைக்கிறார்  உலகநாத பிள்ளை .
இந்தியாவிற்கே வந்து இந்திய மன்னராக முடிசூட்டிக் கொண்ட முதல் ஆங்கில மன்னர், ஐந்தாவது ஜார்ஜ் மன்னர் மறைந்தார். அன்னாருக்கு  இரங்கலும், அவருக்குப் பின்னர் மன்னரான எட்டாம் எட்வர்ட் மன்னருக்கு வாழ்த்துக்களும் கூறப்பட்டுள்ளது.
மற்றும்  இம்மாதத்தில் சங்கக் கல்லூரிக்கு நன்கொடை வழங்கிய அன்பர்களின் பெயர், வழங்கிய தொகை விவரம் குறிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது
________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment