Sunday, July 17, 2016

தமிழ்ப் பொழில் (1936-1937) துணர்: 12 - மலர்: 1




வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937) துணர்: 12 - மலர்: 1
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937)
துணர்: 12 - மலர்: 1

_________________________________________________________

1. வாழ் நாள்
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
[உடலுடன் உயிர் இணைந்து செயலாற்றும் காலமான 'வாழ் நாள்' குறித்த சிந்தனை; வாழ்நாள் குறித்த இந்தியக் கருத்தாக்கங்கள், தமிழ் இலக்கியம் கூறும்  விளக்கங்கள், உலகளாவிய தத்துவங்கள் குறித்த மறுபார்வை ஆகியவற்றின் தொகுப்பு. இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]


2. தமிழ்ப் பத்திரிக்கையின் வரலாறு
ப. கலியாணசுந்தரம் பிள்ளை
[பத்திரிக்கை வளர்ச்சிக்கு உதவுவது உரைநடை. பண்டைய இலக்கிய, இலக்கண, நிகண்டுகள் 'பாடல்' வடிவில் அமைந்து கல்வியிற் சிறந்தாருக்கே  பயனளிக்கும் வகையில் அமைந்தது.  பாடல்களில் ஆங்காங்கே உரைநடை அமைந்த சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களைத் தமிழர் பலகாலமாக அறிந்திருப்பினும், பாக்களையே பெரிதும் போற்றி வளர்க்க முற்பட்டனர்.
மொழி வளர்க்க உதவும் 'இலக்கிய பத்திரிக்கைகள்', சமயம் வளர்க்க உதவும் 'சமயப் பத்திரிக்கைகள்', சமுதாய முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட 'சமுதாய சீர்திருத்தப் பத்திரிக்கைகள்', குறிப்பிட்ட வகுப்பினரின் நலம் காக்க வெளியிடப்படும் 'வகுப்பு முன்னேற்றப் பத்திரிக்கைகள்', இவ்வாறு உயர் நோக்கங்கள் தவிர்த்து பொதுமக்களை மகிழ்விக்க என்னும் 'நகைச்சுவைப் பத்திரிக்கைகள்', நாட்டின் அரசியல் முன்னற்றதைக் கருதும் 'தேசீயப்  பத்திரிக்கைகள்' எனப் பல வகை பத்திரிக்கைகள் தோன்றின.
இந்த ஆறு வகை பத்திரிக்கைகளின் பண்புகளை ஆராய்ந்து,   தமிழகத்தில் இவ்வகைப் பத்திரிக்கைகளின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் வரலாற்றுப் பார்வையாக அறிமுகப்படுத்துகிறார் கலியாணசுந்தரம் பிள்ளை. இது  ஒரு தொடர் கட்டுரை]

3. கருதலளவைப் பகுதி (தொடர்ச்சி ...)
த. இராமநாத பிள்ளை
[4 ஆம்  அதிகாரம்:  கட்டுரையின் இப்பகுதி, அப்பியாசங்கள், முதல் நிலைத் துறைகள், முதல், இரண்டாம், மூன்றாம்  நிலைச் சிறப்பு விதிகள்,  அவற்றைப் பற்றியக் குறிப்புரைகள் ஆகிய கருத்தாக்கங்களை விளக்குகிறது.  இது ஒரு தொடர் கட்டுரை]

4. பிரம்பில் என்னும் வைப்புத் தலம்
வை. சுந்தரேச வாண்டையார்
[அப்பரால் பாடப்பட்ட தேவார வைப்புத் தலமான பிரம்பில் என்ற ஊரின் வரலாறு இக்கட்டுரையில்  ஆராயப்படுகிறது.  தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் 'வேளாண் பிரம்பூர்' மற்றும் 'கள்ளப் பிரம்பூர்' என்ற இரு ஊர்கள் அவ்வூர்க் கோவில்  கல்வெட்டுகளில் பிரம்பில்  அழைக்கப்பட்டுள்ளன.  இருப்பினும், பிரம்பில் எனக் குறிப்பிடும் வேளாண் பிரம்பூர் கல்வெட்டு காலத்தால் முற்பட்டது.  ஆனால் பிரம்பில்  எனக் குறிப்பிடும் கள்ளப் பிரம்பூர் கல்வெட்டு பிற்காலத்தியது மட்டுமல்ல, அதற்கும் முன்னர் அவ்வூர் வேறு பெயரில் (ராஜ சுந்தர சதுர்வேதி மங்கலம், என்று ) அழைக்கப்பட்டதாகவும் கோவிலின் காலத்தால்  முந்திய பிற கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகிறது.  எனவே, காலத்தால் முந்திய கல்வெட்டில் பிரம்பில் என்ற  குறிப்பு கொண்ட  வேளாண் பிரம்பூர் என்ற ஊரே அப்பர் காலத்தில் பிரம்பில்  அழைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நிறுவுகிறார் கட்டுரை ஆசிரியர்.  தென்னிந்தியக் கல்வெட்டு நூல்களில் இடம் பெறாத அவ்வூர்களின் கல்வெட்டுகளையும்,  சோழ நாட்டின் வளநாடு, கூற்றம் போன்ற ஆட்சிப் பிரிவுகள் பற்றியும் இக்கட்டுரை தகவல்கள் பல தருகின்றது]

5. இந்தியாவும் சீனாவும்
T.S. நடராசன்
[சீனப் பேராசிரியர் 'டான்-யுன்-ஷன்'   சாந்திநிகேதனத்தில் நிகழ்த்திய சொற்பொழிவின் மொழிபெயர்ப்பு- பண்டைய  காலம் தொட்டு சீனாவும் இந்தியாவும் கல்வி, மொழி ஆகியவற்றில் மேம்பட்டு உலகில் சிறந்து விளங்கியமை பற்றியும்; இரு நாடுகளின் பெளத்த மத நூல்கள் மற்ற  நாட்டைப் பற்றி குறிப்பிடுவதைப் பற்றியும்; வாழ்வியல் , மக்கள் கொண்ட நல்லொழுக்கப் பண்புகளின் ஒற்றுமை, கலைவளர்ச்சி, நாகரிகம் என பலவற்றிலும்   தொடர்ந்து 5,000 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளும்  சிறந்து விளங்குவது பற்றியும்  விவரிக்கும் இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

6. வல்வடுகு நான்கு - A Chapter in the History of Tanjore. The Nayak Kings.
K.S. சுந்தரம் பிள்ளை
[சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் முன்னர் (1200 களில்) தமிழ் மன்னர்கள் தங்களுக்குள் ஒற்றுமையின்றி இருந்த பொழுது, தமிழகத்தில் அமைதி குலைந்த பொழுது, அலாவுதீன் கில்ஜி அனுப்பிய அவரின் தளபதி மாலிக்காபூரும் படைகளும் மதுரையை ஆட்சி செய்த  இராசசிம்ம பாண்டியனை விரட்டியடித்து தமிழகப்பகுதியை சூறையாடி ஆட்சியைக்  கைப்பற்றினர்.  அந்நாளில் இருந்து அன்னியர் ஆட்சியின் கீழ் சென்ற தமிழகத்தை முகமதியரிடம் இருந்து தங்கள் வசம் கைப்பற்றினர் விஜயநகர மன்னர்கள்.
அவர்களின் பிரதிநிதிகளாக ஆண்ட தஞ்சை நாயக்க மன்னர்கள் பற்றி சுந்தரம் பிள்ளை இக்கட்டுரையில் விவரிக்கிறார். கட்டுரையின் இப்பகுதி தரும் செய்திகள்  வழியாகத்  தஞ்சையை ஆண்ட அச்சுதப்ப நாயக்கர், இரகுநாத நாயக்கர், விஜய ராகவ நாயக்கர் ஆகியோர் குறித்தும்;
மதுரை நாயக்கர்களுடன் ஏற்பட்ட பகையால் மதுரை நாயக்கர்கள் போரில் தஞ்சை நாயக்கர்களை வென்று, 17 ஆம்  நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தஞ்சையை தங்கள் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்தார்கள் என்ற வரலாற்றுத் தகவலும் இப்பகுதியில்  இடம் பெற்றுள்ளது.  இக்கட்டுரை தொடரும்]

7. தமிழ்ச்செய்திகள்
இதழாசிரியர்
[கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழா (மே  13, 1936) குறித்த ஏற்பாடுகள் குறித்த தகவல்கள்; அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தமிழ் வளர்ச்சி நோக்கத்தில் உருவாக்கப்பட்டது என்றாலும் நிர்வாகம் தமிழ்க் கல்விக்கும், தமிழிசைப் புலமைக்கும் ஏற்றம் அளிக்கும் வகையில் பாடத்திட்டங்களைக் கொண்டிருக்கவில்லை குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது; சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம், திருநெல்வேலி பிரிவின் செப்டெம்பர் 1936 விழா ஏற்பாடு குறித்த தகவல்கள்; இம்மாதத்தில் சங்கக் கல்லூரிக்கு நன்கொடை வழங்கிய அன்பர்களின் பெயர், வழங்கிய தொகை விவரம் குறிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.



________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment